நீட் தேர்வு என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவப் படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வு பிரதான தேர்வு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, ஒடியா, உருது, பெங்காலி, தெலுங்கு, கன்னடா, அஸ்ஸாமி, குஜராத்தி, பஞ்சாபி, மலையாளம் ஆகிய 13 மொழிகளில் நீட் தேர்வு எழுத முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வு மார்ச் மாதம் 12-ஆம் தேதி நடைபெறுவதாக மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2022-ல் MD, MS படிப்புகளில் சேருவதற்கான தேர்வுக்கு இன்று முதல் பிப்ரவரி 4-ஆம் தேதி வரை nbe.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மேலும் முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் 31-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.