கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக அரசு இதுவரை தமிழகத்திற்காக எந்த ஒரு திட்டத்தையும் நடைமுறைபடுத்தாமல் அதிமுகவை குறை சொல்வது கடும் கண்டனத்திற்கு உரியது என்று ஓபிஎஸ் சாடியுள்ளார். மேலும் ஓபிஎஸ் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “திமுக அரசு கடந்த 12-ஆம் தேதி பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளையும் தங்களது சாதனை போல சித்தரித்து வருகிறது.
ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்த போது தான் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான பணிகள் நிறைவுபெறும் வேளையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனால் தற்போது திமுக அறிவுறுத்தலின்படி தான் 11 மருத்துவக் கல்லூரிகளும் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறி வருகிறது.
ஆனால் இந்தியாவில் இதுவரை எந்த ஒரு மாநிலமும் செய்யாத சாதனையை அதிமுக ஒரே வருடத்திற்குள் 11 மருத்துவக்கல்லூரிகள் அமைத்து சாதித்துள்ளது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் திமுக என்கிற சுயநலம் வீழ்ந்து விரைவில் அஇஅதிமுக என்கிற பொதுநலம் எழும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கையில் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.