ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த ராணுவ வீரர் மீது கல்லூரி பேருந்து ஏறி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வா.உ.சி நகரில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். துணை ராணுவ வீரரான இவர் சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த சுரேஷ் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தேனிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் தனது ஸ்கூட்டரில் போடிக்கு திரும்பியுள்ளார்.
இதனைதொடர்ந்து துரைசாமிபுரம் காலனி அருகே சென்றுகொண்டிருந்த போது சாலையில் கிடந்த மண் சறுக்கியதில் சுரேஷ் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது போடியில் இருந்து தேனி நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராதவிதமாக சுரேஷின் மீது ஏறியுள்ளது. இந்த கோர விபத்தில் சுரேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுரேஷின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கல்லூரி பேருந்து ஓட்டுநர் போடியை சேர்ந்த முருகேசன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.