2 லாரிகள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் பாரம் ஏற்றிக்கொண்டு 2 லாரிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ராமன்தொட்டி மலைப்பாதை வளைவில் திரும்பிய போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. அதன்பின் பின்னால் வந்த லாரியும் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர்கள் ரவிக்குமார், சிவகுமார், கிளீனர் மது ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரிகளை கிரேன் உதவியுடன் மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.