நூல் திருடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணியகாரம்பாளையம் வி.எஸ்.ஏ. நகர் பகுதியில் நெட்டிங் என்ற பெயரில் பேப்பரிகேஷன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக பவானி நகர் பகுதியில் வசிக்கும் சண்முகசுந்தர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரத்தினம் கடந்த 13-ஆம் தேதி நிறுவனத்திற்கு வழக்கம்போல் வந்துள்ளார். அப்போது குடோனில் அடைத்து வைத்திருந்த 60 கிலோ எடை கொண்ட 16 மூட்டை காணாமல் போனது ரத்தினத்திற்கு தெரியவந்தது. அதன் எடை 960 கிலோ ஆகும். இதுகுறித்து ரத்தினம் நல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சண்முகசுந்தர் கேமராவை அணைத்து விட்டு ஆட்டோவில் நூல்களை ஏற்றி அனுப்பி வைத்தது பதிவாகி இருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சண்முகசுந்தரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சண்முகசுந்தருடன், கரூர் மாவட்டத்திலுள்ள தறிவாசல் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன், வரதராஜ், பிரசாத், ராமராஜ் ஆகியோர் சேர்ந்து நூல் பையை திருடியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 5 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 960 கிலோ நூல் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.