அமெரிக்காவில் உள்ள New Mexico என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று Hector Jesso, April Meadow, Michael ஆகிய மூவரும் குப்பை தொட்டிகளில் ஏதாவது கிடைக்குமா என்று சோதித்து பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு முனங்கல் சத்தம் ஒன்று கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. அது நாய்க்குட்டி அல்லது பூனைக்குட்டியாக இருக்கலாம் என்று நினைத்து மூவரும் தேடி பார்த்தனர்.
ஆனால் குப்பைத்தொட்டியில் தொப்புள்கொடி அகற்றப்படாத நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று பைக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் April Meadow என்ற பெண் அந்த குழந்தையை தூக்கி வாரி அணைத்துக் கொண்டார். மேலும் இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்புக் குழுவினரின் உதவியுடன் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அந்த ஆண் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் கிட்டத்தட்ட 6 மணி நேரமாக கடும் குளிரில் கிடந்ததால் குழந்தை ‘ஹைப்போதெர்மியா’ என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த குழந்தைக்கு ரத்தம் ஏற்றி, ஆக்சிஜனும் உணவும் வாய் மூலம் செலுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை பரிசோதித்த காவல்துறையினர் இளம்பெண் ஒருவர் காரில் வந்து குப்பை தொட்டியில் ஒரு பையை வீசுவதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய இளம்பெண் Alexis Avila ( வயது 18 ) என்பது தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அந்த பெண் விசாரணையில் தனது சக வயது பையனால் கர்ப்பமானதையும் வீட்டு குளியலறையில் குழந்தையை பெற்றெடுத்ததையும் கூறியுள்ளார்.
மேலும் அவர் தான் கர்ப்பமாக இருந்ததே தெரியாத நிலையில் திடீரென குழந்தை பிறந்ததால் அதிர்ச்சியில் குழந்தையை ஒரு துணியில் சுற்றி பின்னர் குப்பை போடும் கவர் ஒன்றில் போட்டு குப்பைத் தொட்டியில் வீசி விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண் மீது குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் 15 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.