யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது சொந்த மாவட்டத்தில் அமைந்துள்ள கோரக்பூர் நகர் தொகுதியிலிருந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவார் என பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் அயோத்தி அல்லது மதுராவில் யோகி ஆதித்யநாத் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யோகி, தனது சொந்த மாவட்டத்திலேயே முதல் முறையாக மக்களை சந்திக்கவுள்ளார்.
டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் இதை அறிவித்தனர். மேலும் பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலையும் அவர்கள் வெளியிட்டனர்.செய்தியாளர்கள் சந்திப்பின்போது முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 58 தொகுதிகள் மற்றும் 2வது கட்ட தேர்தல் நடைபெறும் 55 தொகுதிகளில் இதுவரை 107 வேட்பாளர்களின் பெயர்களை பாஜக முதல் கட்டமாக அறிவித்துள்ளது.
மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 113 ஆகும். துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளர்யா சிராத்து தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறவுள்ளது. பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும். தொடர்ந்து, பிப்ரவரி 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் இதர வாக்குப் பதிவுகள் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெறும். உ.பியில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக ஏற்கனவே யோகி அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் போட்டியிடுவதும் உறுதியாகி விட்டது. இதுவரை நேரடியாக தேர்தலில் யோகி போட்டியிட்டதில்லை. தற்போதுதான் முதல் முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
தேர்தலுக்குப் பிறகு மேலவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராக தொடர்ந்தார்.
தற்போது அவர் போட்டியிடவுள்ள கோரக்பூர் நகர் தொகுதியில் மார்ச் 3ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதாவது யோகி தொகுதியில் 6வது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.