தோழியுடன் குடும்பம் நடத்திய ஐ.டி நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பட்டி நேரு நகரில் ஐ.டி ஊழியரான நிஷாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 8 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிஷாந்த் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து நிஷாந்த் தனது சகோதரியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் பெங்களூரில் இருக்கும் ஐ.டி நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் நிஷாந்த் பெங்களூரு செல்லாமல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனது 37 வயது பெண் தோழியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இரவு சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்ற நிஷாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிஷாந்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிஷாந்தின் தோழியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மனைவி மற்றும் மகனை பிரிந்த நிஷாந்த் பொங்கல் தினத்தில் அவர்களுடன் இருக்க முடியவில்லையே என்ற மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.