மும்பையின் சுனாப்பட்டி பகுதியில் ஸ்வப்னில் கைகர் வசித்து வருகிறார். இவர் மஹிந்திரா நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை கைகர் அவரது நண்பர் அமோல் பவாருடன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் கைகர் மீது மாஞ்சா நூல் பட்டிருக்கிறது. இது குறித்து பேசியுள்ள கைகர் “நாங்கள் உள்நாட்டு விமான நிலையத்திற்கு எதிரே உள்ள மேம்பாலத்தை கடக்கும்போது திடீரென்று ஒரு நூல் என் கழுத்தை அறுத்துவிட்டது.
அதை நான் என் கையால் இழுக்க முயற்சி செய்தேன். அதனால் என் கழுத்தும், கையும் காயமுற்றது” என்று கூறினார். இதையடுத்து பின்னால் அமர்ந்திருந்த அமோல், கைகரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் கழுத்து மற்றும் விரல்களில் பல தையல்கள் போடப்பட்டது. பின் காவல்துறையினர் கைகரின் வாக்குமூலத்தை பதிவு செய்ததோடு சம்பவம் நடந்த இடத்தையும் ஆய்வு செய்துள்ளனர். இதனைதொடர்ந்து உயிரை காவு வாங்கும் மாஞ்சா நூலை கொண்டு காற்றாடி விடுவோருக்கு காவல்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.