ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (47). இவர் அதிமுக ராமநாதபுரம் ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் முன்னாள் ஒன்றியச் செயலராக இருந்தவருக்கும் கட்சி பதவி, குடும்ப பிரச்னை போன்றவற்றால் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அசோக்குமார் சக்கரைக் கோட்டையில் 9ஆவது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதே வார்டில் ராமநாதபுரம் நேரு நகரைச் சேர்ந்த முருகன் முரளிபாபு என்பவரும் போட்டியிடுகிறார். இதனால் இரு தரப்பினருக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டு பகையாக மாறியுள்ளது.
இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு சக்கரக்கோட்டை ரயில்வே கேட் பகுதியில் அசோக்குமார் வாக்கு சேகரிக்கச் சென்றுள்ளார். அப்போது முருகன் முரளிபாபு சில ஆட்களுடன் சேர்ந்து அசோக்குமாரை வழிமறித்து ஆயுதங்களைக் காட்டி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அசோக்குமார் கேணிக்கரை காவல்துறையிடம் புகார் அளித்ததின் பேரில், முருகன் முரளிபாபு, மாந்தோப்பு கண்ணன் (23), எம்.எஸ்.கே.நகர் கார்த்தி (23), வீரபத்திரசாமி தெரு தயாநிதி (22), எம்.எஸ்.கே.நகர் அருண்குமார் (24), ஓம்சக்தி நகர் உலகநாதன் (23), ஆகியோரை காவல் துறையினர் பேருந்து நிலையத்தில் மடக்கி பிடித்தனர். அவர்களில் முருகன் முரளிபாபு தவிர மற்ற 5 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.