சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதாவது சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, “தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொது மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தற்போது மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம்.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் 1.23 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன. அவற்றில் 7% படுக்கைகள் நிரம்பி உள்ளன. மீதம் உள்ள 9% படுக்கைகள் தற்போது வரை காலியாக இருக்கின்றன. கொரோனா தொற்று பாதித்தவர்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கின்றனர். பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 5 % பேர் மட்டும் தான் தற்போது வரை செலுத்தியுள்ளனர்.
இவர்கள் தேவைக்கேற்ப தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட துணை நோய் இருப்பவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதனிடையில் ஒமைக்ரான் தொற்றால் பாதிப்பு இல்லை என்று மக்கள் கவனக்குறைவாக இருக்கக் கூடாது. அடுத்த 2 வாரங்களுக்கு பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட 55 லட்சம் நபர்கள் 1-வது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை. இதனால் அவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். டெல்டா வகை தொற்றானது 10-15 சதவீதம் அளவில் பதிவாகி வருகிறது. கொரோனா தொற்று பாதித்த 7 % விழுக்காட்டினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 80 சதவீத 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.