த்மிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டி கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை என்று தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பொங்கல் விடுமுறை முடிந்து ஜனவரி 19ஆம் தேதி ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை. ஆகவே ஏற்கனவே நடைபெற்று வந்த ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஜனவரி 19ஆம் தேதி முதல் தொடரும் என்றும் அறிவித்துள்ளது.