நண்பர் உயிரிழந்த சோகத்தில் மனமுடைந்த கோவில் பூசாரி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வனசங்கரி அம்மன் கோவில் தெருவில் மருதுபாண்டி என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் கடந்த சில ஆண்டுகள் முன்பு இறந்து விட்டதால் மருதுபாண்டி தனது சகோதரன் மணிகண்டன்(24) என்பவர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சில மாதங்கள் முன்பு மருதுபண்டியின் மிகவும் நெருங்கிய நண்பர் தர்சன் என்பவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனால் அவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பெற்றோரும் இறந்துவிட்ட நிலையில் தற்போது நண்பனும் இறந்துவிட்டதால் விரக்தியடைந்த மருதுபாண்டி வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.