குளத்தின் கரையில் பெண் சிசு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் பின்புறம் அம்மாகுளம் உள்ளது. இந்த குளத்தின் கரை பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசுவை நாய்கள் கடித்து இழுத்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நாய்களை விரட்டி விட்டு கந்தர்வகோட்டை காவல்துறையினருக்கும் கோவிலூர் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சிசுவின் உடலை மீட்டனர்.
அதன்பின் அந்த சிசுவை பிரேத பரிசோதனை செய்ததில் பிறந்து 2 அல்லது 3 நாட்களே ஆன பெண் சிசு என தெரிய வந்துள்ளது. மேலும் 20 லிட்டர் தண்ணீர் கேனின் மூடியை உடைத்து அதன் உள்ளே சிசுவை வைத்து துணியால் மூடி குளத்தில் வீசி சென்றதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோவில் கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் கந்தர்வகோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிசுவை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.