கோவிலில் உருவ பொம்மைகளை வைத்து பக்தர்கள் வினோதமாக வழிபாடு நடத்தியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைதுறையம் பாளையம் கிராமத்தில் இருக்கும் அடர்ந்த வனப்பகுதியில் மாதையன் என்கிற நவக்கிணற்று மாதேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கலை முன்னிட்டு யானை, மாடு, நாய், மனிதன் உள்ளிட்ட உருவ பொம்மைகளுக்கு பக்தர்கள் வர்ணம் பூசி வனத்துறையினரின் அனுமதியுடன் வழிபாடு நடத்துவது வழக்கம். இப்படி வழிபாடு செய்தால் வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் ஆரோக்கியமாக வாழும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை.
இந்நிலையில் கொரோனா தொற்று விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு கிராமத்திற்கு 5 பேர் என்ற எண்ணிக்கையில் யானை, மாடு உள்ளிட்ட உருவ பொம்மைகளை அலங்கரித்து, பூஜை செய்து மேளதாளத்துடன் கோவிலுக்கு எடுத்து சென்றனர். அதன்பிறகு வனத்துறையினரின் அனுமதியுடன் கோவிலில் வைத்து உருவபொம்மைகளுக்கு வினோதமான வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.