குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து அதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லியிலுள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம்தான் ஒட்டுமொத்த இந்தியாவையும் கிளர்ச்சியுறச் செய்தது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல் துறை பல்வேறு விதமான தடுப்பு முறைகளை மேற்கொண்டபோதிலும், மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிடாமல் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், ஜாமியா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ‘டார்க் நைட்’ (Dark Knight) என்ற ஹேக்கர்களால், இந்த இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அந்த இணையதளத்திற்குள் நுழைகையில், ‘இந்த இணையதளம் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, டார்க் நைட்டால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்!’ என்ற செய்தி காணப்படுகிறது.
மேலும் அந்த இணையதளத்தினுள் பகுதியில், ‘மத்திய அரசு அடக்குமுறைகளை கையாண்டாலும் துணிச்சலான ஜாமியா மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். போராட்டத்தை வீழ விடாதீர்கள். அவர்கள் ஒவ்வொரு முறை தாக்கினாலும் வலுவுடன் எழுந்திருங்கள்!’ என்றும்; ’ஊமையாக இருக்க நாங்கள் ஒன்றும் மோடி-அமித் ஷாவின் ஆதரவாளர்கள் அல்ல; நாங்கள் மாணவர்கள். கேள்வி கேட்போம். ஏனென்றால் ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு மாணவர்களாகிய எங்களுக்குள்ளது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.