சென்னை லிங்கப்பன் தெருவில் கணவனை இழந்து தனியாக வசித்து வந்தவர் கதிஜா. இவருக்கு முகமது அப்பாஸ் என்ற மகன் உள்ளார். கதிஜாவின் வீட்டில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தவர் சயது இப்ராஹிம்.
இந்நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி சயது இப்ராஹிம் அவரது நண்பர் வேலு, பரணிதரன் ஆகிய மூவரும் கதிஜாவை கொலை செய்து வீட்டில் இருந்த எட்டு சவரன் தங்கநகை, 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம், செல்ஃபோன் ஆகியவற்றை திருடி தப்பிச் சென்றனர்.
இதையடுத்து, தாய் கதிஜாவின் மரணத்தில் சந்தேகமடைந்த அவரது மகன் முகமது அப்பாஸ் இதுகுறித்து சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், சயது இப்ராஹிம் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை 7ஆவது கூடுதல் அமர்வு நீதிபதி டி.வி.அனில் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறை சார்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டதால் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.