உரிய அனுமதியில்லாமல் ஜல்லிக்கட்டிற்காக காளைகளை அவிழ்த்துவிட முயன்றதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டிற்கு கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு சில பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தச்சன்குறிச்சி பகுதியில் கடந்த 13-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தண்டலை கிராமத்தில் ஜல்லிக்கட்டிற்காக வாடிவாசல் அமைத்து காளைகளை அவிழ்த்துவிட இருப்பதாக திருக்கோகர்ணம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து காவல்துறையினர் உரிய அனுமதி இல்லாமல் இதுபோன்று நடைபெறக் கூடாது எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். ஆனால் பொதுமக்கள் கோவில் காளைகள் மட்டும் அவிழ்த்து விட இருப்பதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனை தொடர்ந்து வாடிவாசல் மற்றும் தடுப்பு கம்புகள் அமைத்திருந்ததை பொதுமக்கள் அகற்றினர்.