சிமெண்ட் ஆலையின் முன்னாள் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள துறைமங்கலம் நியூ காலனியில் கொளஞ்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரியலூரில் இருக்கும் தனியார் சிமெண்ட் ஆலையில் போக்குவரத்து மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவியும், அஸ்வந்த் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 1 ஆண்டாக ரம்யா அபுதாபியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இதனால் கொளஞ்சி வேலைக்கு செல்லாமல் தனது மகனை கவனித்துக் கொண்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக ரம்யாவின் தாயார் தனது பேரனை சொந்த ஊருக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதனை அடுத்து வீட்டில் தனியாக இருந்த கொளஞ்சி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொளஞ்சியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொளஞ்சி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.