தமிழக அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு அகவிலைப்படியை உயர்த்தியது. இதன் மூலமாக பெரும்பாலான அரசு ஊழியர்கள் பயனடைந்துள்ளனர். அத்துடன் பொங்கல் போனஸ் தொகையும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கான 31% அகவிலைப்படியை கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கும் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசு ஊழியர்கள் தற்போது 17% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தப்படும் அகவிலைப்படிகள், ரேஷன் கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கும் அவ்வப்போது அரசு அனுமதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வரும் நிலையில் தற்போது 14 சதவீதம் பெறப்பட்டு 3 சதவீதம் அகவிலைப்படி வித்தியாச குறைவு ஏற்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கும், அகவிலைப்படி உயர்வினை அரசு ஆணை எண் 323, நாள்: 17.10.2019 ஆம் ஆண்டின்படி நிறுத்தி வைக்கப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் மாண்புமிகு முதல்வர், அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி உயர்த்தி அறிவித்து ஆணை எண் 3ல் பிறப்பிக்கப்பட்டுள்ளபடி தற்போது பெற்று வரும் 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அகவிலைப்படி, 1.1.2022 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி இந்த மாதத்தில் இருந்து அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படியும், கூட்டுறவு சங்க ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு 28 % அகவிலைப்படி கிடைக்கும். இதன் காரணமாக கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விடுபட்டுள்ள 3 % அகவிலைப்படி வித்தியாச குறைவினை நேர் செய்து, அரசு ஊழியர்களை போன்று கூட்டுறவு பணியாளர்களுக்கும் 31% ஒரே மாதிரியாகவே அகவிலைப்படியை வழங்க மாநில பதிவாளர் அனுமதி ஆணை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.