ஆட்டோவில் சென்ற போது மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் திருநகர் பகுதியில் டி.வி மெக்கானிக்கான பாக்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான பிரபாகரன் என்பவரது ஆட்டோவில் பாடி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆட்டோவை ஒட்டிய பிரபாகரன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பலமாக மோதியது. அப்போது 20 அடி உயர மேம்பாலத்தில் இருந்து பாக்கியராஜ் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாக்யராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.