தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான மறைந்த எம்ஜிஆரின் பிறந்த நாள் அரசு சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, 1962 ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராகி அடுத்தடுத்து அரசியலில் சிறப்பாக பணியாற்றியவர் எம்.ஜி.ஆர் ஆவார். கொரோனா தொற்று பரவல் 2 நாட்களாக குறைந்து வருகிறது. பொங்கல் விடுமுறைக்கு பின்பு கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட 90 லட்சம் பேர் 2 வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கிறார்கள்.
ஆகவே அவர்கள் உடனே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் . கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக படுக்கை வசதிகள் இருக்கிறது. இதனிடையில் 9 ஆயிரத்துக்கும் குறைவாகவே படுக்கைகள் நிரம்பி உள்ளது. தேவையான அளவு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் கையிருப்பு உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் ஓ.பி. நேரம் அதிகரிப்பது குறித்து மருத்துவமனை முதல்வர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.