தாத்தாவின் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தனக்கு இருசக்கர வாகனம் தருமாறு சாலையில் படுத்து வாலிபர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சித்தன்னவாசல் பகுதியில் ரஹமத்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரஹமத்துல்லா திடீரென சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் ரஹமத்துல்லாவின் தாத்தா சித்தன்னவாசலில் இறந்துவிட்டார் என்றும், ஊரடங்கு நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படாததால் தாத்தாவின் துக்க நிகழ்ச்சிக்கு செல்ல தனக்கு இருசக்கர வாகனம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து ரஹமத்துல்லாவுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர், அவரை சித்தன்னவாசலுக்கு வாடகை கார் மூலம் அனுப்பி வைத்தனர். இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.