ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக ஊர் எல்லையிலுள்ள எல்லம்மா கோவிலுக்கு ஆடு, கோழி உள்ளிட்ட பிராணிகளை நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற இந்த பலிகொடுக்கும் நிகழ்ச்சியில் நேர்த்தி கடனுக்காக வைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்றை அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆடுகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சலபதி என்ற நபர் மது அருந்திவிட்டு முழு போதையில் இருந்துள்ளார்.
அதனால் ஆடு என்று நினைத்து ஆட்டைப் பிடித்து கொண்டிருந்த சுரேஷ் தலையை ஆடு வெட்டும் கத்தியால் ஓங்கி வெட்டியுள்ளார். அதனால் படுகாயம் அடைந்த சுரேஷ் உடனே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.