தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா என்ற கொடூர வைரஸ் தீவிரமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் ஆகிய கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே கொரோனா பரிசோதனை செய்து கொண்டு 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடம் பரவிய கொரோனா 2-ம் அலை எதிர்பாராத அளவு விளைவுகளை ஏற்படுத்தியது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்திலும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வந்தனர். இதன் காரணமாக பல்வேறு துறைகளை சார்ந்த ஊழியர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணையின்படி அரசு ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது அரசு ஊழியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அவருடைய குடும்ப நபர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தாலோ இத்தகைய நிலையில் முழுமையான சிகிச்சை பெறவும், வீட்டுத் தனிமைப்படுத்தியும் கொள்ளலாம்.
மேலும் தனிமை படுத்திக்கொள்ளும் காலத்தை சிறப்பு தற்செயல் விடுப்பு கீழ் அனுமதிக்கலாம் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் விடுப்பு எடுக்க வட்டார மருத்துவ அலுவலரின் சான்று அவசியம் ஆகும். கொரோனா பாதித்தவர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்ட நாள் முதல் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி தனிமைப்படுத்தலில் இருக்க மருத்துவர் பரிந்துரைக்கும் நாள் வரை சிறப்பு தற்செயல் விடுப்புக்கு அனுமதிக்க வேண்டும். அந்த பகுதியின் வட்டார மருத்துவ அலுவலர் பரிந்துரைத்த கடிதம் மற்றும் 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பிற்கான விண்ணப்பத்தையும் அலுவலகத்தில் சமர்ப்பித்து விடுப்பு எடுக்கலாம்.