தமிழகத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வந்ததை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு அரசின் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தீவிரமடைந்து வருவதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை வரும் ஜன.31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதன்பின் கல்லூரிகளுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, விடுமுறை நீட்டித்து தமிழக உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஏனென்றால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்பதால் பொதுத்தேர்வுக்கு உரிய பாடங்களை நடத்த மற்றும் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் நோக்கில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொங்கல் விடுமுறையை தொடர்ந்து மீண்டும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த விடுமுறை மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நடைபெற்று வந்த பயிற்சி வகுப்புகள் நாளை முதல் தொடங்கும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.