தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. அதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி இடங்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. மேலும் மாநகராட்சிகளுக்கான வார்டுகளை வரையறை செய்யும் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கான முதல்கட்ட இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டில் 11 மேயர் பதவிகள் பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளன. இதுபற்றி நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில், நகராட்சி நிர்வாக இயக்குனர் 11-ஆம் தேதி அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிகளை இட ஒதுக்கீடு அடிப்படையில் பிரிப்பது தொடர்பான கருத்துருவை அனுப்பியிருந்தார்.
அந்தக் கடிதத்தை ஏற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த வரிசையில், ஆதிதிராவிடர் பொது, ஆதிதிராவிடர் பெண்கள், பொது பெண்கள் ஆகிய பிரிவினருக்கு மேயர் பதவி இட ஒதுக்கீட்டிற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவி ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிடர் பொதுப்பிரிவினருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர் உள்ளிட்ட 9 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.