Categories
கிரிக்கெட் விளையாட்டு

11 வயதில் பானிபூரி பாய்… 17 வயதில் ரூ. 2.4 கோடிக்கு ஏலம் – தந்தை பெருமிதம்..!!

தனது மகனின் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தந்தை பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் நுழைந்து விளையாட வேண்டும் என்பதே கிரிக்கெட்டை நேசிக்கும் இளைஞர்களின் கனவாக இருக்கும். அதற்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் தொடர் திறவுகோலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திறமையான இளம் வீரர்கள் இனங்காணப்பட்டு, அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்கிறது ஐபிஎல் தொடர்.

இந்நிலையில், 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

இரட்டை சதமடித்த யஷாஸ்வி ஜெய்ஸ்வால்

உத்தரப் பிரதேசத்தில் சிறு கிராமத்தில் பிறந்து, கிரிக்கெட் மீதான ஆர்வத்தோடு 11 வயதில் மும்பை வந்த ஜெய்ஸ்வால், பால் பண்ணை, பானிபூரி கடைகளில் வேலைபார்த்தபடி தெருக்களில் அவ்வப்போது கிரிக்கெட் ஆடியுள்ளார். ஒரு நாள் ஜெய்ஸ்வால் அவ்வாறு ஆடிக்கொண்டிருக்கும்போது, அவரை இனங்கண்ட பயிற்சியாளர் ஜிவாலா சிங், படிப்படியாக அவரை மெருகேற்றி 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பெறவும் செய்தார்.

பயிற்சியாளர் ஜிவாலா சிங் பங்கு அளப்பரியது என்றாலும், அதற்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து தன்னுடைய திறமையை மென்மேலும் வளர்த்துக்கொண்டு தற்போது ஐபிஎல் தொடரில் இடம்பிடித்ததையும் சாதாரணமாக புறந்தள்ளிவிட முடியாது.

பூபேந்த்ரா ஜெய்ஸ்வால்

தனது மகனின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது என்று பெருமிதம் தெரிவிக்கும் ஜெய்ஸ்வாலின் தந்தை பூபேந்த்ரா ஜெய்ஸ்வால், இந்த வெற்றி பணத்தால் சாத்தியமாகாமல் அவரது தீவிர உழைப்பால் சாத்தியமாகியதில் பெருமகிழ்ச்சி கொள்வதாகக் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவிருக்கு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி இந்தியாவிற்கு கோப்பையை தனது மகன் பெற்றுத் தருவார் என்று உறுதியோடு கூறும் அவர், ஐபிஎல்லிலும் கலக்கி இந்திய அணிக்காக கண்டிப்பாக ஆடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

விஜய் ஹசாரே தொடரில் (2019-20) ஜார்கண்ட் அணிக்கெதிரான ஆட்டத்தில் யஷஸ்வி, இரட்டை சதம் அடித்து 16 வயதில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |