சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில் 60 வயது மேற்பட்டவர்களுக்கு இல்லம் தேடி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி போன்றோர் கலந்துகொண்டனர். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்கள் சந்தித்து கூறியதாவது, “தமிழ்நாட்டில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறும்.
இதுவரையிலும் 92,522 நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தற்போது 4.42 லட்சம் நபர்கள் தகுதி உடையவர்களாக இருக்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிக எண்ணிக்கையில் மக்கள் ஊருக்கு சென்றதால், கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா என்பது இரு நாட்களில் தெரியவரும். மருத்துவ கலந்தாய்வு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் முடிவு தெரிந்தவுடன் கலந்தாய்வு அறிவிப்பு வெளியிடப்படும்” என்று அவர் கூறினார்.