பள்ளி மாணவியை கடத்திய கல்லூரி மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி பகுதியில் நாகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள்பாண்டி என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 1 1\2 வருடங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது ஒரு கடையில் ஐஸ்கிரீம் வாங்கும்போது திருச்செந்தூர் பகுதியில் வசிக்கும் 16 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் செல்போன் நம்பரை தெரிந்து கொண்டு தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி மாலையில் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை திருச்செந்தூர் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி சிறுமியை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அருள்பாண்டி சிறுமியை கடத்திச் சென்றிருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதற்கிடையே அருள்பாண்டி சிறுமியை திருச்செந்தூரிலிருந்து மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளார். அதன்பின் பழனியில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டதையடுத்து பால காட்டிற்குச் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அங்கிருந்து சிறுமியை மீட்டு திருச்செந்தூருக்கு அழைத்து வந்துவிட்டனர். இதனையடுத்து அருள்பாண்டி சிறுமியை தேடி திருச்செந்தூர் பேருந்து நிலையம் வந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அருள்பாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.