மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் அன்று, நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் பிளாஸ்டிக் இல்லா தேசம் படைப்பதற்கும் பிரதமர் நரேநந்திர மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்தார். பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக நிர்வகிப்பது குறித்து தற்போதுதான், ஒவ்வொருவரும் சிந்தித்து வரும் நிலையில், இதற்கான வேலைகள் சத்தீஸ்கரின் அம்பிகாபூர் மாநகராட்சி 2014ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. வீடு வீடாகச் சென்று, குப்பைகளை சேகரிக்கும் திட்டத்தை அம்பிகாபூர் மாநகராட்சி 2017ஆம் ஆண்டே தொடங்கியது. இங்கு கடைப்பிடிக்கப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், பல மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
சேகரிப்படும் குப்பைகள் அனைத்தும், தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. மறு சுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மீன்டும் தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுகிறது. வண்ண பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கும், நிறமற்ற பிளாஸ்டிக் கழிவுகள் துகள்களாக மாற்றப்பட்டு, வேறு பல தொழிற்சாலைகளுக்கும் விற்கப்படுகின்றன.
அம்பிகாபூர் மாநகராட்சியின் இந்த முயற்சி மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி, பெண்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகளவு ஏற்படுத்தப்படுகிறது. மற்றுமொரு தனித்துவமான முயற்சியாக, ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால், இலவசமாக உணவை வழங்கும் ‘கார்பேஜ கஃபே’ உணவகத்தை இம்மாநகராட்சி அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது.
ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தாலும், அதுகுறித்த பொதுமான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லை. அதற்குத் தேவையான சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை. அம்பிகாபூர் மாநகராட்சி பின்பற்றும் இத்திட்டத்தை இந்தியாவிலுள்ள அனைத்து மாநகராட்சிகளும் பின்பற்றினால், குப்பையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் சரிபாதியாக குறையும்