குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சித்தாபுதூர் மின்மயானம் அருகில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கிருக்கும் சாலையோரம் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்நிலையில் திடீரென குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குப்பைக்கிடங்கில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.