பாலத்தின் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் பகுதியில் ஆண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுயம்பு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் 6-வது மகன் முத்துக்குமாரை தவிர அனைவருக்கும் திருமணம் முடிந்து அவரவர் குடும்பத்தினருடன் தனியாக வசித்து வந்துள்ளனர். அவரது தந்தை இறந்துவிட்டதால் முத்துக்குமார் அம்மாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் சென்னல் மாநகரில் உள்ள அண்ணன் கருப்பசாமி வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மணலூரிலிருந்து கொற்கை சென்னல் மாநகர் பாதையில் அமைந்துள்ள சிறியமடை பாலத்தின் அருகில் முத்துக்குமார் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து முத்துக்குமாரின் அண்ணன் பட்டுராஜ் ஏரல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் முத்துக்குமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மடை பாலத்தில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த முத்துகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.