தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு மேலும் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறையை நீட்டிப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக மாநிலம் முழுவதிலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ள அரசு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்தது. இம்முறை மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைவருக்கும் சங்கராந்தி விடுமுறையை மாநில அரசு நீட்டித்துள்ளதால், 2022 ஜனவரி 30ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் அடுத்த உத்தரவு வரும் வரையிலும் தெலுங்கானா மாநிலம் முழுவதிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜனவரி 8 மற்றும் 16க்கு இடையில் சங்கராந்தி விடுமுறையை அரசு அறிவித்து இருந்தது. இந்த முடிவு புதிய கொரோனா நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு பின் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையில் தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் மாநிலம் முழுவதும் பகுதி நேர ஊரடங்கை அமல்படுத்த அரசு ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறது. இதற்கிடையில் ஏராளமான மாணவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படாததால் தெலுங்கானா பள்ளிகள், கல்லூரிகளையும் மூடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.