விருதுநகர் பாராளுமன்ற எம்பி மாணிக்கம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டுவது தொடர்பாக அந்த இடங்களை விருதுநகர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “விருதுநகர் மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரியை அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த கல்லூரிக்கு காமராஜரின் பெயரை சூட்ட வேண்டும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் மூலம் மக்களை குழப்புவதை நிறுத்தி கொள்ளுங்கள்” என கேட்டுக்கொண்டார்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும், அதனை தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்து 2026 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறும். இதற்கிடையில் எதையாவது கூறி அதிமுக மக்களை குழப்பும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனக் கூறினார். மேலும் மத்திய அரசின் கடந்த பட்ஜெட் ஏமாற்றத்தை அளித்தது. இனி நிறைவேற்ற இருக்கும் பட்ஜெடாவது ஏழை மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். அது பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் சார்ந்து இருக்கக் கூடாது என கூறினார்.
மேலும் நீட்தேர்வு விவகாரத்தை பொறுத்தவரை அனைத்துக் கட்சி நிர்வாகிகளாலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் நீட் தேர்வு தொடர்பாக முடிவு செய்ய வேண்டும் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மோடி திருக்குறள் கூறி தமிழர்களை ஏமாற்ற முடியாது என கூறினார். மேலும் ராஜேந்திர பாலாஜி தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு அவர் செய்தது தவறு, அதற்கான தண்டனையை அவர் அனுபவித்தே தீர வேண்டும் எனக் கூறினார்.