ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் செய்யாறு தாலுகாவில் வசித்து வரும் 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதியன்று பள்ளிக்கு சென்று விட்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக செய்யாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராணிபேட்டை மாவட்டம் காட்டுபாக்கம் கிராமத்தில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான பரதன் என்ற வாலிபர் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியையும், பரதனையும் செய்யாறு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்துள்ளனர்.
அப்போது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பரதன் செய்யாறு பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் வேலை செய்த போது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தார். மேலும் மாணவிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை கடத்தி சென்று திருமணம் செய்ததும் விசாரணையில் வெளிவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து பரதனை கைது செய்துள்ளனர்.