நாடு முழுவதும் கடந்த வருடம் பரவிய கொரோனா தொற்று பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டதால் தான் கொரோனா 3-வது அலையில் உயிரிழப்புகள் அதிகளவில் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த அடிப்படையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே பணிக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அசாம் மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலகங்களுக்குள் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் அவர்கள் யாரையும் தடுப்பூசி செலுத்தும்படி கட்டாயப்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் அலுவலகங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். ஏனென்றால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஒருவர் வீட்டிலே இருந்தால் தொற்று பரவ வாய்ப்பு இல்லை என்றும், அவர் பொது இடங்களுக்கு செல்வதால் மட்டுமே தொற்று பரவும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் ஜனவரி 15ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு விடுமுறை இருந்தால் எடுத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அனைவரும் பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.