தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை காரணமாக மாணவர்களின் நலன் கருதி முதலில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆலோசனை செய்யப்பட்டு 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் வீட்டில் இருந்து ஆசிரியர்கள் உதவியுடனும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் , அரசின் யூடியூப் சேனல் மூலமாகவும் படிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்தது.
இந்நிலையில் அதிகரித்த கொரோனா தொற்று பரவலால் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதால் அன்று வரை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 14ஆம் தேதி தமிழக்த்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 முதல் 16 வரை 3 நாட்களுக்கு பண்டிகை கால விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் வெளியூர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக திங்கட்கிழமை (ஜனவரி.17) அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் (ஜன.18) நேற்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுடன் விடுமுறை முடிவடைந்தது. இதனைதொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் விடுமுறை முடிந்த நிலையில் இன்று முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு மாணவர்கள் மீண்டும் வரும் வரையிலும் ஆசிரியர்கள் அலுவலக பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.