நாட்டின் தலைநகர் டெல்லியில் இந்திய பிரதமர் மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீர வணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையிடுவார். இதையடுத்து அந்த விழாவில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்களில் சார்பில் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும்.
இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாக கூறி, வ.உ. சி,வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதற்கு அனுமதி கொடுத்து விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு உறுதி செய்ய வேண்டும் என்று கூறிய அவர், 3 சுற்றிலும் தமிழக அதிகாரிகள் விளக்கம் அளித்தும், 4-ஆம் சுற்றில் தமிழக அதிகாரிகளை அழைக்காமலேயே நிராகரித்தது ஏமாற்றம் அளித்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தி தமிழகத்தில் காட்சிப்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். எந்தவித காரணமும் குறிப்பிடாமல் தமிழக ஊர்தி மறுக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. எந்த ஊர்தி நிராகரிக்கப்பட்டதோ அதே ஊர்தி தமிழகம் முழுவதும் காட்சிப்படுத்தப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.