மோட்டார் சைக்கிள் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பனவிளை செறுதி கோணம் பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துகிருஷ்ணன் தனது நண்பரான செல்லப்பனுடன் மோட்டார் சைக்கிளில் பேச்சிப்பாறை நோக்கி சென்றுள்ளார். இவர்கள் சேனங்கோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த மினி பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்து கிருஷ்ணனும், செல்லப்பனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.