மளிகை கடையில் பணம் திருடிய மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் கனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்டாலின் என்ற மகன் உள்ளார். இவர் விளாத்திகுளம் மார்க்கெட் எம்.ஜி.ஆர். சிலை அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஸ்டாலின் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து கடை பகுதியில் சுத்தம் செய்வதற்காக இளங்கோவன் என்பவர் வந்துள்ளார். அப்போது கடையின் வெளிப்புற பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து இளங்கோவன் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்டாலின் பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது.
இதனையடுத்து கடைக்குள் சென்று ஸ்டாலின் பார்த்தபோது கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.80,000 திருடப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து ஸ்டாலின் விளாத்திகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஸ்டாலின் கடையை பூட்டி விட்டு சென்ற பிறகு மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.80 ஆயிரத்தை திருடிச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கடையில் பதிவாகி இருந்த மர்மநபரின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் கடையில் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.