இரும்பு உருக்கு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பழவூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை அமைந்துள்ளது. இங்கு வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஆலையில் இரும்பை உருக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது நெருப்பு குழம்பு தெறித்து விழுந்ததால் வேலை பார்த்து கொண்டிருந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த பகதூர், சுக்கின் பீகாரை சேர்ந்த பசந்த்குமார் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பகதூர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மற்ற 2 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.