பிரபல இயக்குனர் தங்கர்பச்சன் காளையை அடக்கும் வீரர்களுக்கு வாகனத்திற்கு பதிலாக விவசாய கருவிகளை கொடுக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பாரம்பரியமான விளையாட்டுக்களில் ஒன்றாக இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகைக்காக பல மாவட்டங்களில் நடத்தப்படும். இதில், அதிகமான காளைகளை அடக்கிய வீரர்களுக்கு வாகனம் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
இதற்கு பிரபல இயக்குனர் தங்கர்பச்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வருடமும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற, மாடுபிடி வீரருக்கு வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. அப்போதும் இந்த கோரிக்கையை அரசாங்கத்திடம் வைத்தேன். ஆனால் அதே போன்று இந்த வருடமும் ஜல்லிக்கட்டு வீரருக்கு முதலமைச்சர் வாகனம் வழங்குவதாக வெளியான செய்தியை பார்த்தேன்.
வாகனத்தின் தொகைக்கு சமமாக அந்த வீரருக்கு உழவுத் தொழில் சம்பந்தப்பட்ட மாடுகள், உழவுக்கருவிகள் மற்றும் நிலம் போன்றவற்றை கொடுத்து, அவர்கள் வாழ்விற்கு முன்னேற்றம் ஏற்படுத்திக் கொடுத்தால், இன்னும் அதிக மகிழ்ச்சியை நாம் பெறலாம்.
பரிசாக அளிக்கப்படும் வாகனத்தை வைத்துக்கொண்டு பெட்ரோல், டீசல் விற்கப்படும் விலையில், அதற்காக அவர்கள் அதிகம் செலவழிக்க வேண்டியது இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். தயவு செய்து, முதல்வர் இந்த கோரிக்கை தொடர்பில் ஆலோசித்து செயல்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.