அரசு மருத்துவமனை முன்பு 2 இளம்பெண்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தெத்துப்பட்டி பகுதியில் மகாமுனி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட மகாமுனியை அவரது உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் மகாமுனியின் 2 மகள்கள் அரசு மருத்துவமனை முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது தங்களது தந்தைக்கு 4 நாட்களாக முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், இதுகுறித்து கேட்ட போது மருத்துவமனை நிர்வாகத்தினர் சரியாக பதில் அளிக்கவில்லை எனவும் இளம்பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே தந்தையின் உடல் நிலை மோசமடைந்து விடுமோ என்ற அச்சத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக இளம்பெண்கள் தெரிவித்துள்ளனர். அப்போது உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.