சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குப்பாண்டம்பாளையம் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு மறைவான இடத்தில் சேவலை வைத்து பணம் கட்டி 6 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ்குமார், கார்த்திகேயன், செந்தில்குமார், முருகன், திருமூர்த்தி மற்றும் பாண்டி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 6 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 4 சேவல்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.3500-யும் பறிமுதல் செய்தனர்.