போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் டிரைவரான புவியரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அருளின் வீட்டிலிருந்த டிராக்டருக்கு பூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு புவியரசு அந்த டிராக்டரை ஓட்டி சென்றுள்ளார். அவருக்கு அருகில் அருள் அமர்ந்திருந்தார். இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் பால் சொசைட்டிக்குள் நுழைந்துவிட்டது. இந்த விபத்தில் பால் வாங்குவதற்காக வந்திருந்த செண்பகவள்ளி, மணியம்மாள், அருள் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து படுகாயம் அடைந்த 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் விசாரணைக்கு பயந்த புவியரசு தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புவியரசின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.