சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் 163 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார் மற்றும் ராஜா தலைமையில் காவல்துறையினர் ஆவாரங்காடு ஜனதா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் அங்கிருந்த வீட்டில் நடத்திய சோதனையில்சுமார் 163 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் மது விற்பனையில் ஈடுபட்ட ரமேஷ்(42), அய்யனார் (32), காந்திபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (65) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.