கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு வேலைப்பார்த்து வரும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதானது 56ஆக இருக்கும் நிலையில், இதனை 57ஆக உயர்த்த அம்மாநில அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாநிலத்தில் மட்டும்தான் இவர்களுக்கான ஓய்வு பெறும் வயதானது 56ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 58 மற்றும் ஒருசில மாநிலங்களில் 60ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மண் சாண்டி அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 56 ஆக நிர்ணயம் செய்து உத்தரவிட்டார். தற்போது வரையிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 57 ஆக உயர்த்துவதற்கு அம்மாநில அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் இது குறித்த அறிவிப்பு, 2022 – 2023 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் போது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி கே.மோகன்தாஸ் தலைமையிலான கேரள மாநில ஊதியத் திருத்தக் குழு, அரசு ஊழியர்களின் ஓய்வு வயது அம்சத்தை ஆய்வு மேற்கொண்டு பரிந்துரைத்தது என்றும், இதை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கேரள மாநிலத்தில் வேலைக்காக 40 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில், இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், இளைஞர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது