போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உயிரிழந்த பெண்ணின் உடலை புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள முடிப்பட்டி கிராமத்தில் குப்புசாமி என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு கோமதி என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கோமதிக்கு ஏற்கனவே கர்ப்பப்பையில் பாதிப்பு இருந்த நிலையில் 2-வதாக கர்பமடைந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடத்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து வீட்டில் இருந்த கோமதிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அப்போது கோமதிக்கு கரு கலைந்து சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையறிந்த குடும்பத்தினர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமலேயே கோமதியின் உடலை புதைத்துள்ளனர். இதற்கிடையே சேலூர்நாடு கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமார் இதுகுறித்து வாழவந்திநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கொல்லிமலை தாசில்தார் கிருஷ்ணன் முன்னிலையில் கோமதியின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்விற்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.