கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி மற்றும் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் மூர்த்தி கூறியதாவது,
“வைரஸ் பரவல் தொடர்ந்து வேகம் எடுத்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் முன் ஜாக்கிரதையுடன் செயல்பட வேண்டும். மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை தடுப்பூசிக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை. பூஸ்டர் தடுப்பூசி தற்போது கைவசம் உள்ளது. இரண்டாவது டோஸ் போட்டு 9 மாதங்கள் பூர்த்தியான அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்..! ஆனால் யாருக்கும் 9 மாதங்கள் பூர்த்தி ஆகியிருக்க வாய்ப்பில்லை. எனினும் பூஸ்டர் தடுப்பூசி எந்த பஞ்சமும் இல்லாமல் கையிருப்பு உள்ளது…எல்லோரும் கவனமாகவும் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்.! வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் உயிர் இழப்புகள் குறைவாகவே உள்ளது என்பது ஆறுதல் தரக்கூடிய ஒரு விஷயம்..!’ என அவர் கூறினார்.